What Is Aadippirappu (Tamil Festival) in Tamil - ஆடிப்பிறப்பு என்றால் என்ன ?

What Is Aadippirappu (Tamil Festival)

ஆடிப்பிறப்பு என்றால் என்ன ?


ஆடிப்பிறப்பு என்பது ஏன் கொண்டாடப்படுகின்றது? எப்பொழுது கொண்டாடப்படுகிறது? எதற்காக கொண்டாடப்படுகிறது? இந்த நிகழ்வு அன்று இதை எதற்காக "ஆடிக்கூழ்" செய்து கொண்டாடுகின்றனர் என்பது பற்றியும் விரிவாக இங்கு பார்க்க உள்ளோம்.

ஆடி பிறப்பு என்பது தமிழ் ஆடி மாதத்தின் ஆரம்ப நாள். ஒரு வருடத்தின் நடுப்பகுதியில் வரும் இந்தத் தொடக்க நாளை ஒற்றுமையுடனும், சந்தோஷமாகவும் வரவேற்கவே ”ஆடிக்கூழ்” நிகழ்வு தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டமானது, ஒரு பண்பாட்டுடன், நம்பிக்கையாக, சடங்காக சந்ததி வழியாக கடத்தப்படுகிறது. ஏன் ஆடி மாதத்தை வரவேற்க வேண்டும் ? ஆடி மாதத்திலிருந்து குளிர்காலம் ஆரம்பிப்பதால் மாறா காலநிலை இருந்த கால கட்டத்தில் ஆடிப்பெருக்கு எனும் மழைக்காலத்தில் மழை சிலவாரங்கள் பெய்யும். இப்போதெல்லாம் அவ்வாறில்லை. பருவநிலை மாற்றம் ஆடிப்பெருக்கை மாற்றம் செய்துவிட்டது. ஆடிப்பெருக்கு வந்ததும் உழவர்கள் வயல்வேலைகளை ஆரம்பிப்பார்கள். அடுத்து வரும் ஆறு மாதங்களும் ஓய்வற்ற கடின உழைப்பை வழங்க வேண்டிய மாதங்களாகும். எனவே அந்த ஆறுமாதங்களுக்கும் வரப்போகின்ற அழகிய குளிர்மையான காலத்தை வரவேற்கவே ஆடித் திருநாளை கொண்டாடப்படுகின்றோம். நெல், பயறு, உழுந்து ஆகிய தானியங்களோடு கருப்பட்டியும் சேர்த்து தயாரித்த கூழ் மற்றும் கொழுக்கட்டையை உணவுப் பண்டங்கள் தயாரித்து உறவினர், அயலவர்களிடையே பகிர்ந்து மகிந்திருப்பது இந்நாளின் முக்கிய சிறப்பம்சமாகும். தமிழில் "ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" என்ற பாடலும் பிரபல்யமானது. தமிழர் நாம் கல், மலை, மரம், சூரியனையும் மட்டும் வழிபட்டு வரவில்லை . இதேபோல காலநிலையையும் வணங்கியிருக்கிறோம். அதனை வரவேற்று விமரிசையாக விழாவும் எடுத்திருக்கிறோம். உலகின் சிறப்பான பண்பாட்டுக்குரியவர்கள் தமிழர்கள் நாம் தான் என்பதை அழகாக எடுத்துக்காட்ட இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை . கடவுள் பின்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இயற்கையோடு கடவுள்கள் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். அதை விஞ்ஞான பூர்வமாகப் பார்த்தால், சமூகம் இணைந்து வருடமொன்றின் இரண்டாம் கட்டமாகிய காலநிலைக் காலத்தைக் சேர்ந்து வரவேற்கிறது. பொருளாதார ரீதியில் நோக்கினால் சமூகத்திற்கு வளம் தரப்போகிற கால கட்டத்திற்கு மதிப்பளிக்கிற சடங்குதான் நடக்கிறது. இன்றைய காலத்தில் இவ்வாறான சடங்குகளை நாம் பின்பற்றுவதில்லை. நம் சமூகம் விவசாயத்திலிருந்து வெளி வந்து, விவசாயத்திற்கும் மக்களுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டமையினாலும் இவற்றை மறந்து விட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பிரதாய பின்பற்றல்களில்தான் இன உணர்வு மனதில் வேரோடுகிறது. இன உணர்வின் மீதான அதீத பற்றுதலே தேசிய உணர்வாக மாற்றம் அடைகிறது. ஒற்றுமையான தேசிய உணர்வுதான் தேசத்தை உருவாக்கும். எனவே இவற்றை பின்பற்றாமல் இன உணர்வை மீள உருவாக்க இயலாது. இனத்திற்கான எண்ணத்தைப் புதுப்பிக்க முடியாது . எனவே நம் பண்பாட்டை ஆழமாக, அழகாக புரிந்து நடந்து கொள்வோம். எமது பண்பாட்டை மீளக் கட்டியெழுப்பும் இந்த மாதிரியான சடங்குகளை மீளமீள நிகழ்த்தி நம்மையும், நம் பண்பாடுகளையும் புதுப்பித்துக்கொள்வோம்.

நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எழுதிய  ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடல்


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


ஆடிப்பிறப்பு என்னவென்பது பற்றி இங்கு நாங்கள் விரிவாகப் பார்த்து உள்ளோம் இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்துப் பெட்டியில் ( Comment Box ) பதிவிடவும்.


***நன்றி வணக்கம்***

கருத்துரையிடுக

0 கருத்துகள்